சென்னை சட்டக் கல்லூரி மாணவன் கைது விவகாரம்: 2 போலீசார் சஸ்பெண்ட்

சென்னையில் சட்டக் கல்லூரி மாணவன் கைது விவகாரத்தில் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்தும், 3 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-19 11:50 GMT

சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் சந்திப்பு அருகே கடந்த வியாழனன்று  அதிகாலை  கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வியாசர்பாடி புது நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்ரஹீம், 21 என்பவர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்துல்ரஹீம் முகக் கவசம் அணியாமல் சென்றதால் போலீசார் அவரிடம் அணியும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கும் அப்துல் ரஹீமுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, அங்கு பணியில் இருந்த காவலர் உத்திரகுமாரை அப்துல்ரஹீம் தாக்கியதாக கூறப்படுகிறது. உத்தரகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்துல் ரஹீமை கைது செய்த போலீசார், அவரை கடுமையாக தாக்கியதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அப்துல் ரஹீம் தரப்பில் சென்னை மாநகர கமிஷனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட சென்னை மாநகர கமிஷனர், அதுவரை கொடுங்கையூர் காவலர் உத்தர குமார் மற்றும் ஏட்டு பூமிநாதன் ஆகிய இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில்  ஏட்டு பூமிநாதன் காவலர் உத்தர குமார் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும் அன்று இரவு பணியில் இருந்த எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நசீமா மற்றும் கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன்,முதல் நிலை காவலர் ஹேமநாதன் ஆகிய 3 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகர கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News