வியாசர்பாடியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
சென்னை வியாசர்பாடியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 4வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 70 ).இவர் சென்னை மாநகர போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மல்லிகா( 63 ).கடந்த மாதம் 29ஆம் தேதி காலை 7 மணி அளவில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சர்மா நகர் முதல் மெயின் ரோடு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் மல்லிகா கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மல்லிகாவை மீட்டு எம்.கே.பி. நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஓட்டேரியில் இரு சக்கர வாகனம் திருடுபோன சி.சி.டி.வி. காட்சி பதிவுகளையும் பார்த்தபோது இரண்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஓரே நபர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து எம்.கே.பி. நகர் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பெரும்பாக்கத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சென்னை பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்( 22 )மற்றும் ஓட்டேரி பகுதியை சேர்ந்த முகேஷ் குமார்( 19 )என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மூதாட்டியிடம் இருந்து செயினை பறித்து அதனை ஒரு திருநங்கையிடம் கொடுத்து அடகு கடையில் அடகு வைத்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 5 சவரன் தங்க சங்கிலியை மற்றும் ஓட்டேரியில் திருடப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து எம்.கே.பி. நகர் போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.