வியாசர்பாடி பகுதிகளில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம், லேப்டாப் கொள்ளை
வியாசர்பாடி பகுதிகளில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம், லேப்டாப்பை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை பெரம்பூர் பிபி ரோடு பகுதியில் இன்று காலை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்ட போது இரண்டு கடைகளின பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு இதுகுறித்து செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் அங்கு சென்ற செம்பியம் போலீசார் நடத்திய விசாரணையில், நந்தகுமார் 46 என்பவருக்கு சொந்தமான கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, இரண்டு லேப்டாப்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதேபோன்று அதே முகவரியில் இயங்கி வரும் பாண்டியராஜன், 37 என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையின் பூட்டை உடைத்து அதில் இருந்த 2000 ரூபாய் பணம் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அதேபோல், வியாசர்பாடி மெல்பட்டி பொண்ணப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது 36 இவர் வியாசர்பாடி ஸ்டீபன்சன் லைன் 4வது தெரு பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இன்று காலை 6 மணி அளவில் கடையை திறப்பதற்காக சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த 17 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.