சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவை அலுவலகம் அடித்து உடைப்பு- பரபரப்பு
பெரம்பூர் பாரதி சாலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.;
சென்னை பெரம்பூர் பாரதி சாலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அலுவலகம் செயல்பட்டு வருகிறது இதன் தலைவராக த.வெள்ளையன் இருந்து வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில் கத்தியுடன் வந்த மர்ம நபர்கள் வியாபாரிகள் சங்க அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நாற்காலிகள் மற்றும் இதர பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். அருகில் இருந்தவர்களிடம், வெள்ளையனின் மகன் டைமன் ராஜா எங்கே என்று கேட்டு உள்ளனர். அவர் அங்கு இல்லாததால், அந்த நபர்கள் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து வெள்ளையன் மகன் டைமன் ராஜா 42. செம்பியம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளதாகவும், தனது தம்பி மிஸ்மர் காந்தன் என்பவர், பேரவையில் பதவி கிடைக்காத காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆட்களை வைத்து சங்க அலுவலகத்திற்கு வந்து பொருட்களை உடைத்து, தன்னையும் வெட்ட வந்ததாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார் இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.