தீபாவளி பட்டாசு வெடித்ததில் சென்னை சாய்பாபா கோவிலில் தீ விபத்து

தீபாவளி பட்டாசு வெடித்ததில் சென்னை சாய்பாபா கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-11-12 16:33 GMT

தீ விபத்து (கோப்பு படம்)

தீபாவளி பட்டாசு விழுந்து வெடித்ததில் சென்னை சாய்பாபா கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின்போது  காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறி இருந்ததால் அதனை பின்பற்றி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தனர்.

ஆனாலும் அதனை மீறி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று எந்த வித நேரக்கட்டுப்பாடும் இன்றி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தீ விபத்துக்கள் ஏற்பட்டன.

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மயிலாப்பூர் பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்து வந்த  நிலையில் அதில் ஒரு ராக்கெட் வெடி, சாப்பாபா கோவில் கோபுரத்தை சுற்றி வைக்கப்பட்டு இருந்த ஓலையில் பட்டு வெடித்தது.  இதில் அந்த பகுதி முழுவதும் தீ பிடித்து எரிந்தது.

சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் புதிதாக கோபுரம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோபுரத்தை சுற்றி ஓலை வைக்கப்பட்டு கோபுரம் தெரியாதபடி மறைக்கப்பட்டு இருந்த நிலையில், தீபாவளி பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடித்ததால்  கோவிலில் தீ பிடித்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தீயணைப்பு துறையினர் விரைவாக வந்து தீ மேலும் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர். இதுபற்றி போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News