கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்துகளுக்கு அதிக இடம் ஒதுக்கப்படுமா?

தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழகத்தின் 100 பேருந்துகளுக்கான நிறுத்துமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-25 05:23 GMT

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் 

சென்னை:சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

பெரும்பாலான கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் டிச. 30ல் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகளை இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது.

இதில் தெரியவந்த சிறு குறைபாடுகளை சரி செய்யும் பணிகளும், திறப்பு விழா ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு, 358 அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு, 202 பேருந்துகள் இயக்கப்படுகிறது..

இந்த பேருந்துகள், வெளியூரில் இருந்து திரும்பிய பின், மீண்டும் புறப்படும் வரை, 8 மணி நேரம் சென்னையில் நிறுத்தி வைக்கப்படும். இந்நிலையில் கிளாம்பாக்கத்தில், அரசு போக்குவரத்து கழகத்தின், 100 பேருந்துகளுக்கான நிறுத்துமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதான முனையத்துக்கு எதிரில் உள்ள காலி இடத்தை, தற்போது, ஆம்னி பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய, 102 அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளை நிறுத்துவதற்கான இடவசதியை ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்காக, முழுமையான நிறுத்துமிடம், எரி பொருள் நிரப்புமிடம், பணிமனை அமைக்க உரிய இடம் ஒதுக்க வேண்டும் என, அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஏற்கனவே கடிதம் வாயிலாக கோரியிருந்தார்.

Tags:    

Similar News