சேப்பாக்கத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கலைஞர் நடமாடும் நூலகம் அறிமுகம்
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கலைஞர் நடமாடும் நூலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.;
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உருப்பினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அந்தத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது சொந்த செலவில் செய்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் சார்பில் ரூ. 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகத்தினை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, நடமாடும் நூலகத்தினை பயன்படுத்தும் வகையில், நூலகத்திற்கான உறுப்பினர் அட்டைகளை பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் சார்பில் மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பில் இந்த நடமாடும் நூலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 7 வார்டுகள் உள்ளன. அந்த 7 வார்டுகளில் நாளொன்றுக்கு ஒரு வார்டு என இந்த நடமாடும் நூலகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடமாடும் நூலகத்தில் இல்லாத பயனாளர்களுக்கு தேவைப்படும் புத்தகங்கள் குறித்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு 9176991768 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அனுமதி பெற்ற நபர்கள் மூலமாக பயனாளர்களின் இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் வாகனம் மூலம் பயனாளர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களைப் பெற்று, படித்து ஒரு வாரத்திற்குள் திரும்ப ஒப்படைத்தால், தேவைப்படும் பிற புத்தகங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அவையும் உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த நிதியில் இருந்து 50 மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன், பாடலாசிரியர் யுகபாரதி, எழுத்தாளர் இமையம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.