மின்னகம் நுகர்வோர் சேவை மைய எண்ணை விளம்பரப்படுத்த அமைச்சர் உத்தரவு

அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தின், 94987 94987 என்ற புகார் எண்ணை விளம்பரப்படுத்துமாறு, பொறியாளர்களுக்கு, மின்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-07-30 02:13 GMT

அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தின், 94987 94987 என்ற புகார் எண்ணை விளம்பரப்படுத்துமாறு, பொறியாளர்களுக்கு, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுதும் உள்ள மக்கள், மின் தடை மட்டுமின்றி, மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும், ஒரே இடத்தில் தெரிவிக்கும் வகையில், சென்னை, மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 'மின்னகம் நுகர்வோர் சேவை மையம்' துவக்கப்பட்டுள்ளது.இந்த மையத்தை, 94987 94987 என்ற எண்ணில், 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த எண் பலருக்கு தெரிவதில்லை.

எனவே சேவை மைய எண்ணுடன், தற்போது செயல்பாட்டில் உள்ள வேறு எண்களை விளம்பரப்படுத்துமாறு, மின் வாரியத்திற்கு, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது- மின்னகம் சேவை மையஎண்ணை விளம்பரப்படுத்துமாறு, பல முறை அறிவுறுத்தப்பட்டும், அதை பின்பற்றவில்லை என புகார் வருகிறது.

சேவை மைய எண்ணில் மட்டும் புகார் தரலாம். எனவே, மக்கள் தெரிந்து கொள்ள, அந்த எண் அச்சிடப்பட்ட, 'ஸ்டிக்கர்'கள், அனைத்து அலுவலகங்களிலும் ஒட்டுவதுடன், பெயின்டால் எழுதப்படவும் வேண்டும். 3.20 கோடி நுகர்வோர்களின் மொபைல் போன் எண்களுக்கும், புகார் எண்ணை எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

1.61 லட்சம் புகார்! மின்னகம் மையத்தில், நேற்று வரை, 1.61 லட்சம் புகார்கள் பெறப்பட்டதில், 1.47 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.நிலுவையில் உள்ள, 14 ஆயிரம் புகார்கள் மீது விசாரணை நடந்து வருகிறது என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News