சென்னையில் வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ இரயில் பயணச்சீட்டு: புதிய வசதி அறிமுகம்

சென்னையில் வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ இரயில் பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.;

Update: 2023-05-18 06:00 GMT

பயணச்சீட்டுகளை வாட்ஸ்அப் மூலம் பெறுவதற்கான புதிய வசதியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் திருமங்கலம் அறிமுகப்படுத்தினார்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் எளிய வகையில் பயணச்சீட்டுகளை வாட்ஸ்அப் மூலம் பெறுவதற்கான புதிய வசதியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவன இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தி. அர்ச்சுனன் (திட்டங்கள்), அலோசகர் கே.ஏ. மனோகரன் (சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), கரிக்ஸ் மொபைல் பிரைவேட் நிறுவன இணை இயக்குநர் அலியாஸ்கர் ஷபீர் போபால்வாலா, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

இந்நிகழ்வின் போது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், கூறியதாவது:-

"சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில் பயணிகளுக்கு சிறந்த தரமான சேவைகளை வழங்குவதில் எப்போதும் முன்னணியில் உள்ளோம். இன்று, அனைத்து மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் பயணச்சீட்டு வசதியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.

பயணிகள் இப்போது தங்கள் வாட்ஸ்அப்பின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இடைமுகத்தில் இருந்து தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம், கட்டணங்களைச் சரிபார்க்கலாம் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளைப் பெறலாம். மேலும் இது பயணிகளுக்கு நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. இந்த சேவைகள் தற்போதுள்ள 20% கட்டண தள்ளுபடியையும் வழங்கும்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு பெறுவதற்கான வசதி அனைத்து பயணிகளுக்கும் ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கிறது. சேவையைப் பயன்படுத்த, மெட்ரோ பயணிகள், +91 83000 86000 என்ற எண்ணுக்கு "HI" என்று அனுப்ப வேண்டும் அல்லது க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தல், கட்டணம் அல்லது வழித்தடங்கள் குறித்த விவரங்களைச் சரிபார்த்தல், மெட்ரோ இரயில் நிலையம் போன்ற பல்வேறு வசதிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் பயணச்சீட்டு சேவையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

1. ஒற்றைப் பயணம் மற்றும் குழு க்யூஆர் பயணச்சீட்டு (அதிகபட்சம் 6 பயணச்சீட்டுகள்) மட்டுமே ஒரு க்யூஆர் குறியீட்டை உருவாக்க முடியும்.

2. க்யூஆர் பயணச்சீட்டின் செல்லுபடியானது க்யூஆர் பயணச்சீட்டு வாங்கிய அதே நாளில் முடிவாகும். பயணிகள் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ளே வந்ததும், பயணிகள் சேருமிடத்திற்கு 120 நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும்.

3. அதே நிலையத்தில் இருந்து வெளியேற, பயணிகள் நுழைந்த நேரத்திலிருந்து 20 நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும்.

4.வணிக நேரங்கள் முடிந்த பிறகு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.

5. வாட்ஸ்அப் பயணச்சீட்டு முறையில் பயணச்சீட்டை ரத்து செய்ய அனுமதி இல்லை.

Tags:    

Similar News