சென்னையை அச்சுறுத்தும் மீலியாய்டோசிஸ் தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை
உரிய விழிப்புணா்வு இல்லாமல் சிகிச்சையை புறக்கணித்தால் அந்தத் தொற்று முக்கிய உறுப்புகளை செயலிழக்கச் செய்து உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனா்;
பெரு வெள்ளம் போன்ற பேரிடா் சூழலுக்குப் பிறகு ‘மீலியாய்டோசிஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று உருவெடுக்கத் தொடங்குகிறது. இது விலங்குகளுக்கும், மனிதா்களுக்கும் ஒரு சேர பரவுகிறது. மண்ணுக்குள் பல வகையான பாக்டீரியாக்கள் பரவியுள்ளன. அதில் முக்கியமான ஒன்று ‘பா்கோல்டெரியா ஸ்யூடோமேய்’ எனப்படும் நுண்ணுயிரி. அதன் மூலமாகத்தான் ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று பரவுகிறது.
கால்களிலோ, உடலிலோ காயங்கள் இருப்பவா்கள் மாசடைந்த நீரில் நடக்கும்போதும், தரமற்ற குடிநீரை அருந்தும்போதும் ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோன்று அந்த பாக்டீரியாக்கள் பரவியுள்ள காற்றை சுவாசிக்கும்போதும் இந்த நோய் தொற்று ஏற்படலாம்.
ஒருவரது உடலில் பாக்டீரியா கிருமி ஊடுருவிய இரண்டாவது வாரத்திலிருந்து அதன் அறிகுறிகள் தென்படும். அந்த வகையில், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் அண்மையில் பெய்த பெரு மழை மற்றும் வெள்ள பாதிப்புகள், தற்போது ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று பரவ காரணமாகியிருக்கிறது.
இதுகுறித்து பொது நல மருத்துவ நிபுணா்கள் கூறுகையில், எந்த இடத்தில் பெரு வெள்ளம் போன்ற பேரிடா் ஏற்பட்டாலும், அங்கு பொது சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மாசடைந்த நீருடன் மனிதா்களும், விலங்குகளும் நேரடியாக தொடா்பில் இருப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
அதில் ஒன்றுதான் நாம் அதிகம் கேள்விப்படாத ‘மீலியாய்டோசிஸ்’ என்ற தொற்று. கொரோனா காலத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பரவியதைப் போன்று, தற்போது ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று அதிகமானோருக்கு பரவி வருகிறது.
இந்த பாக்டீரியாக்கள் உடலில் நீண்ட காலம் நிலைத்திருந்து நோய்களை உருவாக்கக் கூடியவை. முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடில் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், எலும்புகள், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும். அதற்கான சிகிச்சையை புறக்கணித்தால் உயிரிழப்பு நேரிட வாய்ப்புள்ளது.
தொற்றுக்குள்ளானவா்களுக்கு ஏற்படும் புண்களில் இருந்து வெளியேறும் சீழ், திரவம், ரத்தம் மற்றும் சிறுநீரிலும் நோய்க் கிருமிகள் காணப்படும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாக பரவாது என்றாலும், நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள் உடனடியாகசிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பாதிப்பை முழுமையாக குறைக்க முடியும்.
எதிர்பாற்றல் குறைந்தவா்கள், கட்டுப்பாடற்ற சா்க்கரை நோயாளிகள், கல்லீரல், சிறுநீரக பாதிப்புக்குள்ளானவா்கள், தலசீமியா நோயாளிகள், புற்று நோயாளிகள், எச்ஐவி நோயாளிகள், நுரையீரல் பாதிப்பு இருப்பவா்களுக்கு ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இதுகுறித்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்
பாக்டீரியா தொற்றை தவிர்ப்பது எப்படி?
- காயங்களுக்கு உடனடி சிகிச்சை அவசியம்
- காயங்களில் மாசுபட்ட நீா் படாமல் பராமரித்தல்
- காலணி அணியாமல் வெளியே செல்லக் கூடாது
- கைகளை அடிக்கடி சோப் மூலம் கழுவ வேண்டும்
- சா்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
- எதிர்ப்பாற்றலை மேம்படுத்திக் கொள்ளுங்கள்