மேகதாது அணை விவகாரம், எடியூரப்பா கருத்துக்கு எதிர்கட்சி தலைவர் கண்டனம்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நேற்று தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.;
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்வது காவேரி ஆற்றின் நீர். இந்த காவேரிக்கு நடுவே கர்நாடக அரசு கட்ட முயலும் மேகதாது அணைக்கு எதிராக பல சட்டப் போராட்டங்களை முந்தைய அதிமுக அரசு நடத்தியுள்ளது.
மேலும், காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை நிலைநாட்ட எனது தலைமையிலான அரசு காவிரியில் மேகதாது அணை கட்டப்படுவதை நிறுத்தகோரி பிரதமரிடம் வலியுறுத்தியது, மேலும் இந்த விவகாரம் குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டு அது தற்போது நிலுவையில் உள்ளது.
இச்சூழ்நிலையில் கர்நாடக முதலமைச்சர் மேகதாதுவில் அணை கட்டப்படும் என அறிவித்திருப்பதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த விவகாரத்தை கூர்மையாக கவனித்து காவிரியில் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரை முழுமையாக பெற்று தமிழக நலன்காக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.