சென்னை மாநகராட்சி : 10ம் தேதி 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
சென்னையில் 10ம் தேதி 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
கொரோனா தொற்று இரண்டாம் அலையின் போது தொற்று பாதிப்பு அதிகளவிலும், பெரும்பாலான நபர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடனும் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது.
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொரோனா தடுப்பூசி ஒன்றே பாதுகாப்பான நிலை என்கின்ற அடிப்படையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதல்வர், தமிழக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்றும், காசநோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள நபர்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கி கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ள இடங்களில் அனைத்து அங்காடிகளிலும் உள்ள வணிகர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் சிறப்பு முகாம்களின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று பள்ளி, கல்லூரிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 26.08.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பொதுமக்கள் அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகாமையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் பொழுது, ஆர்வமுடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது சிறப்பு முகாம்களின் மூலம் தெரிய வருகிறது.
முதல்வரின் உத்தரவின்படி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதேபோன்று பெரிய அளவிலான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அவ்வப்பொழுது நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், 12.09.2021 அன்று நடைபெற்ற முதல் தீவிர கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1,91,350 கோவிட் தடுப்பூசிகளும், 19.09.2021 அன்று நடைபெற்ற இரண்டாவது தீவிர கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 2,02,931 கொரோனா தடுப்பூசிகளும், 26.09.2021 அன்று நடைபெற்ற மூன்றாவது தீவிர கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 2,25,627 கொரோனா தடுப்பூசிகளும் மற்றும் 03.10.2021 அன்று நடைபெற்ற நான்காவது தீவிர கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1,58,144 கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 07.10.2021 அன்று வரை அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்களின் வாயிலாக 35,05,108 முதல் தவணை தடுப்பூசிகள், 19,32,527 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 54,37,635 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக 7,77,403 முதல் தவணை தடுப்பூசிகளும் 2,86,434 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் என 10,63,837 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 07.10.2021 அன்று வரை அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 65,01,472 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் 10.10.2021 அன்று 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. பெருநகர
சென்னை மாநகராட்சியில் தற்பொழுது 3,35,810 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,86,020 கோவேக்சின் தடுப்பூசிகளும் என மொத்தம் 5,21,830 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
கடந்த 2 மாதங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடையும் நபர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் நபர்களில் 90 சதவீதத்திற்கு மேலான நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களே என மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் மாநகராட்சியின் சிறப்பு முகாம்களில் பங்குபெற்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.