மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திருவொற்றியூர் அருகே மணலி புதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா.
திருவொற்றியூர், மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத திருவிழாவினையொட்டி திருத்தேரோட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னையை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்டதர்மபதி புரட்டாசி மாத திருவிழா கடந்த அக்டோபர் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கடந்த பத்து நாள்களாக தினமும் காலை 6 மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், மாலை 5 மணிக்கு திருஏடுவாசிப்பும், இரவு 8.30 மணிக்கும் நடைபெறுகிறது. பிறகு ஒவ்வொரு நாளும் காளை வாகனம், அண்ண வாகனம், கருட வாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர்மவாகனம், சர்ப்ப வாகனம், மலர்முகசிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், பூம்பல்லக்கு வாகனம், மற்றும் இந்திர விமானங்களில் அய்யா வைகுண்டர் வீதி உலாவரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு திருத்தேரில் அய்யா வைகுண்டர் வீதி உலா வரும் நிகழ்ச்சி தொடங்கியது. தர்மபதி நிர்வாகிகள், பொதுமக்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நகரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வான வேடிக்கைகள், சங்கு முழக்கம், நாதஸ்வர கச்சேரி, செண்டை மேளத்துடன் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அய்யா அரகர சிவ சிவ, அய்யா உண்டு என பக்தி பரவசத்துடன் முழங்கியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் வீதிகள் வழியாக வலம் வந்த பின் மாலை 5 மணிக்கு இருப்பிட நிலையை அடைந்ததது.
இவ்விழாவில் சமத்துவ மக்கள் கழக நிறுவனத்தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன்,
தர்மபதி நிர்வாக தலைவர் துரைப்பழம், துணைத் தலைவர் சுந்தரேசன், பொருளாளர் ஜெயக்கொடி, செயலாளர்கள் ஐவென்ஸ், ஜெயகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொடி அசைத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி தொடர் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானாோர் கலந்து கொண்டு உணவருந்தினர். போக்குவரத்து, வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தர்மபதி நிர்வாகிகள், போலீஸார் மேற்கொண்டிருந்தனர்.