கொளத்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
கொளத்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.;
கொளத்தூர் - வில்லிவாக்கம் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலை விரிவாக்கம் செய்வதற்காக, அருகில் உள்ள அவ்வை நகரில் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை மாநகராட்சி மண்டலம் 6 ன் அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை கடந்த 11 ம் தேதி, பொக்லைன் எந்திரங்கள் மூலம் 58 வீடுகளை இடித்தனர்.
இதன் காரணமாக, வீடுகளை இழந்த மக்கள் அரசை கண்டித்தும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஒன்று கூடி, வில்லிவாக்கம் கொளத்தூர் சாலையில் அமர்ந்து, 60 வருடங்கள் வாழ்ந்த வீட்டை இடித்து விட்டதால் மாற்று இடம் தரக்கோரி குடும்பத்துடன் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கொளத்தூர் போலீசார் குவிக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு இதுபற்றிய தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த திரு வி க நகர் மண்டல அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு உரிய முறையில் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததனர். அதன் பேரில் நீண்ட இழுபறிக்குப் பின் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.