உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Update: 2021-08-26 12:34 GMT

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கட்சியின் மாநிலச் செயலாளர்கள், மண்டல செயலாளர்களுடன் கமல்ஹாசன் இன்றைய தினம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் உயர்மட்ட நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து வெளியேறினர். எனவே தற்போதைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்வதால் ஏற்படக்கூடிய சாதக பாதக அம்சங்கள் குறித்தும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலையில் நிர்வாகிகள் சிலர் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்கலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News