சென்னையில் நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை: முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை (8ம் தேதி) ஒருநாள் மட்டும் விடுமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் முதலமைச்சர் ம மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையி்டார். பொதுமக்களை சந்தித்து உணவு பொட்டலங்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காத வண்ணம் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை அமைப்புகள் மூலம் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, ரிப்பன் மாளிகையில் உள்ளர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் . அத்துடன் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின் முடிவில், ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், தனியார் நிறுவனங்களும், தற்போதைய மழை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, தங்கள் பணியாளர்களுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் வகையிலோ ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொண்டார்.