Mid Night லேயே ஆரம்பிச்சிடிச்சா!? சென்னையில் கடுமையான டிராஃபிக் ஜாம்!
சென்னையில் கடுமையான டிராஃபிக் ஜாம். நள்ளிரவு முதலே கடும் அவதிக்குள்ளான மக்கள்
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்ததால், சென்னைவாசிகள் பலரும் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். இந்த விடுமுறைகள் முடிந்த நிலையில், இன்று புதன்கிழமை அலுவலகம், பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டியிருப்பதால், ஏராளமானோர் சென்னை நோக்கி திரும்பி வருகின்றனர். இதனால், சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சாலையில் நள்ளிரவிலேயே நெரிசல்
அரசு பஸ்களில் மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஆம்னி பஸ்களும் சென்னையை நோக்கி வருகின்றன. இதைத்தவிர, கார்களிலும், வேன்களிலும், பொதுமக்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். நேற்று நள்ளிரவிலேயே ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போதும்கூட, பெருங்களத்தூர் பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் பகுதியில் ஆமை போல வாகனங்கள்
தாம்பரம் பகுதியில் ஆமை போல வாகனங்கள் ஊர்ந்து வருகிறது. பிரதான சாலைகளில், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் சூழல் உள்ளதால், வாகன ஓட்டிகள் காலையிலேயே கடும் அவஸ்தைக்கு ஆளாகி உள்ளனர்.
மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடுமையான நெரிசல்
சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. சிங்கபெருமாள் கோயில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு நெரிசல் நீண்டுள்ளது. கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்கின்றன.
போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கைகள்
போக்குவரத்து போலீசார் சாலைகளில் நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கைகளில் ஏற்பட்டு வருகிறார்கள். இதனிடையே, தாம்பரம் போன்ற பகுதிகளில் , வயதானவர்கள் உட்பட பயணிகள் பலரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். அதேபோல, பல்வேறு சுங்கச்சாவடிகளிலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நெரிசலை தவிர்க்க சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறைகள் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.