சென்னை மணலியில் 14 செ.மீ கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மணலி பகுதியில் 14 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்தது. உஷ்ணத்தின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் தவித்தனர். பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு எதிர்பாராத விதமாக பவத்த மழை கொட்டிது. நகரின் பல இடங்களில் கொட்டிய மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் மணலி பகுதியில் 14 செ.மீ கனமழை பதிவாகி, மணலி நியூ டவுன், எச்சன்குழி, பர்மா நகர் மற்றும் சடையன்குப்பம் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான சாலைகள் மூழ்கியுள்ளன. டி.பி.பி சாலை, மாதவரம் கோசப்பூர் சாலை ஆகியவை முற்றிலும் மூடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மதுரவாயல், வானகரம் பகுதிகளில் தலா 8 செ.மீ., மழை பதிவாகி இருக்கிறது. வளசரவாக்கத்தில் 7 செ.மீ.,மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக ஆங்காங்கே மின் வினியோகமும் பாதிக்கப்பட்டது.
இதனிடையே, மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்றதால் சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.