திரு.வி.க.நகர், ராயபுரம் மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு
கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த குப்பைகளை பதப்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய செயல்பாடு தொடங்கிய பிறகு சேவை மேம்படும்.
சென்னையில் நாள் ஒன்றுக்கு 6000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மாநகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 19 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.
மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் தினமும் சென்னை நகர் முழுவதும் பகலில் மட்டுமின்றி இரவிலும் குப்பைகள் அள்ளப்படுகின்றன. ஓட்டல்கள், கடைகள், திருமண மண்டபங்கள், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூர் ற்றும் பெருங்குடி கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
ஏற்கனவே 11 மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்கள் தனியாரிடம் கொடுக்க மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், பொது தனியார் கூட்டாண்மை மாதிரியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த குப்பைகளை பதப்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
ஒருங்கிணைந்த கழிவுகளை பதப்படுத்தும் வசதி பொது-தனியார் கூட்டாண்மை முறையில் 25 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்கு ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் கழிவுகளை அகற்றுவதற்கான அரசு நிர்வாக அனுமதி அளித்தவுடன் திரு.வி.க. நகர், ராயபுரம் மண்டலங்களில் தனியார் மூலம் குப்பை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த புதிய செயல்பாடு தொடங்கிய பிறகு சேவை மேம்படும். தற்போது இரண்டு மண்டலங்களிலும் உள்ள 800 நிரந்தர ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள். மேலும் ஓய்வு பெறும் தருவாயில் உள்ளனர். தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும்.
இரண்டு மண்டலங்களில் கழிவு மேலாண்மை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இருக்கும் பல தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று அவர்கள் தெரிவித்தனர். புதிய ஆபரேட்டர் மூலம் பணி அமர்த்தப்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் ரூ.200 கூலி குறைவாக பெறுவார்கள். நாள் ஒன்றுக்கு ரூ.600-க்கு மேல் ஊதியம் பெறும் அதே வேளையில் தனியார்களால் வழங்கப்படும் ஊதியம் குறைவாக உள்ளது என்று ஊழியர் ஒருவர் கூறினார்.