வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷாலை படகு மூலம் மீட்ட தீயணைப்புத்துறை
உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.;
மிக்ஜம் ங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவின்பேரில் பொது மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன.
ஏற்கனவே 3 படகுகள் இயங்குவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணி அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.