ஜாபர் சாதிக் வீடு, இயக்குனர் அமீர் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சென்னையில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.;
டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உட்பட இதுவரை ஐந்து பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் ஐந்து பேரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை முதலீடு செய்த தொழில்கள் என்னென்ன? அவர்கள் யாருக்கெல்லாம் பணம் கொடுத்தார்கள்? உள்ளிட்ட விவரங்களை சேகரித்து தொடர்ந்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த வருவாயை, சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்து உள்ளதால் அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஏற்கனவே வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும் கேட்டுப் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய சுமார் 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய பிற தொழில் செய்யும் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் ஜாபர் சாதிக்கு உடன் தொழில் ரீதியாக தொடர்பு வைத்திருந்தவர்களை கண்டறிந்து அவர்களது வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, அவர்களுக்கு சொந்தமான புரசைவாக்கம் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை செய்து வீட்டில் சீல் வைத்து சென்றிருந்தனர். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் நீதிமன்றம் உத்தரவு பெற்று, தற்போது தான் அவர்கள் வீட்டை திறந்து அங்கே வசித்து வருகின்றனர். தற்போது அமலாக்கதுறை அதிகாரிகள் ஜாபர் சாதிக் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்ததாக இயக்குனர் அமீரின் வீடு மற்றும் தியாகராய நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குனர் அமீரிடம் 10 மணி நேரம் விசாரணைகள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கும், இயக்குனரும் இணைந்து திரைப்படம் தயாரிப்பது, தொழிலில் பங்குதாரர்களாக முதலீடு செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பாதித்த பணத்தை அமீர் சம்பந்தப்ட்ட தொழிலுக்கு கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் அமலாக்கத்தறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.