மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புக்கு பிங்க் ஸ்குவாட்!
பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பிங்க் ஸ்குவாட் -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘பிங்க் ஸ்குவாட்’-ஐ இன்று 15.02.2024 நந்தனம் அண்ணாசாலையில் உள்ள சிம்ஆர்எல்-ல் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ. சித்திக், இ.ஆ.ப., முன்னிலையில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் ‘பிங்க் ஸ்குவாட்’ பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் அர்ச்சுனன் (திட்டங்கள்), முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜெயலக்ஷ்மி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்குவதைத் தவிர, ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் ‘பிங்க் ஸ்குவாட்’ அணியை நியமித்துள்ளது.
‘பிங்க் ஸ்குவாட்’ உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதைத் தவிர, வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர்.
முதல் கட்டமாக குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மெட்ரோ பயணிகள் அதிகமாக பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களான புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் மெட்ரோ போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கும் பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது என்று கூறினார்