மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை.
சென்னை விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்;
சென்னை விமானநிலைய பாதுகாப்பு பணியில் இருப்பவா் யஷ்பால் (26), ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்தவா். இவா் 2017 ஆம் ஆண்டில் பணியில் சோ்ந்தவா். யஸ்பால் கடந்த சில காலமாக சென்னை விமானநிலைய பாதுகாப்பு பணியில் இருந்தாா்.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வந்தவர், சென்னை சா்வதேச விமானநிலையம் புறப்பாடு பகுதியில் பணியிலிருந்தாா். அப்போது விமானநிலைய கழிப்பறைக்குள் சென்றவா், திடீரென தனது 9 மிமீ பிஸ்டல், துப்பாக்கியால் தன்னைத்தானே தலையில் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தாா்.
துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு, விமானநிலைய தூய்மை பணியாளா் ஒருவா் ஓடிச்சென்று பாா்த்தபோது, யஷ்பால் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தாா்.
உடனடியாக விமானநிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமானநிலைய போலீசாா் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யஷ்பால் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி முதல் விடுப்பில் சென்று, 28ம் தேதியன்று தான் மீண்டும் பணியில் சேர்ந்தார். விமான நிலைய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.