பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி

முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முதலமைச்சரை வேந்தராக போடுங்களேன் தவறு என்ன? -அமைச்சர் பொன்முடி கேள்வி;

Update: 2022-04-25 08:45 GMT

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரைத் தான் நியமிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அறிமுக நிலையிலேயே இதற்கு அதிமுக, பாஜக ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே அதிமுகவும் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

விவாதத்தின் மீது இறுதியாக உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, அண்ணாவின் பெயரில் உள்ள கட்சி, மாநில சுயாட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளதில் இருந்தே அவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளலாம், சூரப்பாவுக்கு எதிராக ஆணையம் அமைத்த ஆட்சி தான் அதிமுக ஆட்சி. குஜராத், தெலங்கானா, கர்நாடகா போல் இங்கும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. குஜராத்தில் ஏன் இப்படி சட்டம் உள்ளது? என்று அதிமுகவினர் மோடியைத் தான் கேட்க வேண்டும் என்று விளக்கினார்.

கல்வித்துறையில் ஆளுநர் – அரசுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை தீர்க்கவே முதலமைச்சர் இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறார் எனவும், இதை எதிர்த்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர், ஜெயலலிதா சொன்னதைக் கூட கேட்காமல், மாநிய சுயாட்சிக்கு விரோதமாக அதிமுகவினர் செயல்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் பொன்முடி, "பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மாநில அரசின் உரிமையில் தலையிடவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் சொல்லியிருப்பதை உண்மையிலேயே வரவேற்கிறோம். ஆனால், ஒன்றிய அரசு தேசிய கல்விக்கொள்கையை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதை கண்டிக்கிறோம்" என்றார்.

ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர், முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முதலமைச்சரைத் தான் வேந்தராக போடுங்களேன்..என்ன தவறு அதில்? எனவும் அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.

Similar News