கொளத்தூர்: "கழிவுநீர் அகற்றும் நிலையம்" அமைக்க பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்
கொளத்தூரில் குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.1.2022) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கௌதமபுரம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குடிநீர் வசதி செய்து தரும் பணி மற்றும் ஜி.கே.எம். காலனியில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
அசோக் அவென்யூ. ரங்கதாஸ் காலனி மற்றும் அஞ்சுகம் நகர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்கள் பணிகள் மற்றும் தார்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவஹர் சாலையில் அமைந்துள்ள கௌதமபுரம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி செய்து தரும் வகையில், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக வியாசர்பாடி நீர்நிலை பகிர்மான நிலையத்திலிருந்து ஜவஹர் சாலை வரை 2.8 கி.மீ. தூரத்திற்கு 99 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜெகநாதன் சாலை மற்றும் அசோக் அவென்யூ பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கிநிற்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர், ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 40 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் பணியினை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மேலும், ரங்கதாஸ் காலனி மற்றும் நேதாஜி காலனி மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இறுதியாக, அஞ்சுகம் நகர் 12-வது தெருவில் தார்சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும், விரைவாகவும், தரமாகவும், குறித்த நேரத்திலும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வின் போது, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி. விஜயராஜ் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.