மீன் பிடி தடைக்காலம் நிவாரணம் ரூ 6 ஆயிரம் வழங்கப்படும் : முதலமைச்சர் அறிவிப்பு
மீன் பிடி தடைக்கால நிவாரணம் ரூ 6 ஆயிரமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;
மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதற்கு முன்பு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் உயர்த்தி ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தேர்தல் வாக்குறுதியின்படி நடப்பாண்டு முதல் குடும்பம் ஒன்றுக்கு மீன் பிடி தடைக்காலத்தில் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும்.தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.80 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ.108 கோடி நிவாரணத் தொகை தரப்படும்.
முதல்கட்டமாக 11 கடலோர மாவட்டங்களில் 1.24 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.