13 வகை மளிகைபொருள் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்!
தமிழக மக்களுக்கு 13 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.;
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக மேலும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்தநிலையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது 13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2ம் தவணை கொரோனா நிவாரண நிதி ரூ.2ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் நாளை தொடங்க உள்ளார்.
இந்த நிலையில் 13 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்துக்கான டோக்கன்கள் வழங்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.