மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. தனியார் பள்ளி தாளாளர் மகன் போக்சோ சட்டத்தில் கைது..
சென்னை திருநின்றவூர் தனியார் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்தப் பள்ளியின் தாளாளர் மகனை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.;
சென்னை ஆவடி அருகே உள்ள திருநின்றவூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தாளாளராக சிந்தை ஜெயராமன் என்பவர் உள்ளார். அவரது மகன் வினோத் பள்ளி நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சிலரை வினோத் தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 23 ஆம் தேதி பள்ளியை திடீரென முற்றுகையிட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளித் தாளாளர் ஜெயராமனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மற்றொரு புறம், மாணவர்கள் வினோத்தை கைது செய்யுமாறு வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி, பள்ளிக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சில மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது மாணவர்கள் சிலர் போலீஸாரால் தாக்கப்பட்டனர்.
போராட்டம் தீவிரமடைந்ததால், மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருநின்றவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இருப்பினும், பள்ளி நிர்வாகி வினோத் தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில், மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சிலரிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீஸார் வினோத் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வினோத் மீது நான்கு பிரிவுகளின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான வினோத்தை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர்.
விமான நிலையத்தில் கைது: போலீஸார் தேடி வந்த நிலையில், வினோத் திடீரென தன்மீது குற்றம் ஏதும் இல்லை என்றும் வேண்டும் என்றே சிலர் தவறான குற்றச்சாட்டுகளை கூறி சிக்க வைத்துவிட்டாதகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதற்கிடையே, வினோத் கோவாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீஸார் வினோத்தின் செல்போன் எண்ணை வைத்து கண்காணித்தபோது அவர் கோவாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்து கொண்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக, விமான நிலையம் சென்ற போலீஸார் வினோத்தை கைது செய்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.