ரத்த வாந்தி.. பலியான மாணவர்! போராட்டத்தில் குதித்த சகாக்கள்!
சென்னையில் தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் ரத்த வாந்தி எடுத்து மரணமடைந்த சோகம். கல்லூரி மாணவர்கள் போராட்டம்.;
சென்னையில் ரத்த வாந்தி எடுத்து பலியான மாணவரின் மரணத்துக்கு நீதி வேண்டி சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை கானத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி தனியார் கடல்சார் பல்கலைக் கழகம் ஒன்று இருக்கிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் பிஇ, பிடெக், பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைத் தேர்ந்து எடுத்து படித்து வருகின்றனர்.
கடல்வழி தொடர்பு மற்றும் கடல்வழி பணி ஆகியவை பாடங்களாக கொண்டு பலரும் படித்து வரும் சூழலில் இங்கு ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22வயதான பிரசாந்த் எனும் மாணவர் இந்த பல்கலைக் கழகத்தில் பிஇ இறுதி ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியிலேயே தங்கும் விடுதி வசதிகளும் இருப்பதால் அங்கே தங்கி படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென குடலைப் புரட்டும் மாதிரியான உணர்வு ஏற்பட அவர் சக மாணவரிடம் இதுகுறித்து கூறியிருக்கிறார். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென ரத்த வாந்தி எடுத்ததாகவும் அதன் தொடர்ச்சியாக மயங்கி விழுந்துவிட்டதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மாணவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நலம்பெறவில்லை என்று மருத்துவர்களை கைவிரித்துவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அவரது திடீர் மரணம் மாணவர்களைக் கொந்தளிக்கச் செய்துவிட்டது. அவரது மரணத்துக்கான காரணம் என்ன என்பதையும் ரத்த வாந்தி எடுத்தது ஏன் என்பதையும் கண்டுபிடிக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இவரது மரணத்துக்கு கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியர்தான் காரணம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் உடற்கல்வி ஆசிரியர் புருஷோத்தமன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது கல்லூரி நிர்வாகம்.