சென்னை காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக உலக சாதனை!
சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சுமார் 5 ஆயிரத்து 50 பெண் காவலர்கள் இணைந்து பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வடிவமைப்பு நிகழ்ச்சியை நடத்தினர்;
சென்னை பெருநகர காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. காவல் உதவி செயலி, அவள் திட்டம் போன்ற முயற்சிகள் மூலம் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி, சைபர் குற்ற விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதலிடத்தையும், அதிகமான பெண் காவலர்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தையும் பெற்றிருப்பது சிறப்பு.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உதவி மைய எண்கள் மற்றும் திட்டங்களைப் பற்றி 5,767 பெண் காவலர்கள் மற்றும் ஆளிநர்கள் இணைந்து வடிவமைக்கவும், இதனை உலக சாதனையாக செய்யவும் திட்டமிடப்பட்டது.
நேற்று மாலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் 5,550 பெண் காவலர்கள் மற்றும் ஆளிநர்கள் 1091, 181, 1098, நிர்பயா திட்டம், காவல் உதவி செயலி போன்ற பெண்கள் பாதுகாப்பு அம்சங்களை எழுத்துக்கள் வடிவிலும் நின்று வடிவமைத்து பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை உருவாக்கி அசத்தினர்.
ஒரே நேரத்தில் 5 ஆயிரத்து 50 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஒன்று கூடி விழிப்புணர்வு வடிவத்தை மேற்கொண்ட இந்த நிகழ்வை வேர்ல்ட் ரெக்கார்ட் ஆப் யூனியன் அமைப்பு உலக சாதனையாக அறிவித்தது. மேலும், இந்த அமைப்பின் நிர்வாக அதிகாரி ஷெரிபா இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கான சான்றிதழ்களைச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் உயர் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னை காவல்துறையின் இந்த சாதனை, பெண்கள் பாதுகாப்புக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.