சுற்றுலாப் பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ இரயில் அரங்கு 3ம் இடம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ இரயில் அரங்கு 3-வது இடம் பெற்றுள்ளது.

Update: 2023-03-24 07:26 GMT

சென்னை தீவுதிடலில் நடைபெற்ற நிறைவு விழாவில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அரங்கு 3-வது இடம் பிடித்தமைக்காக  பரிசினை வழங்கும் அமைச்சர்கள்.

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக 47-வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்றது. இந்த பொருட்காட்சியில் தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசு அரங்கங்களும், அரசு சார்ந்த நிறுவனத்தின் அரங்கங்களும் தனியார் அரங்கங்களும் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட்டு வந்தனர்.

இந்த சுற்றுலா பொருட்காட்சியில், நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடம் கண்கவர் அரங்கமாக பொதுமக்களின் பார்வைக்கு இடம்பெற்றது.

சுற்றுலா பொருட்காட்சி நிறைவு நாளன்று பொருட்காட்சியில் அரசுத் துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் அமைக்கப்பட்ட அரங்குகளில் சிறந்த அரங்குகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு சார்ந்த நிறுவனங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அரங்கு 3-வது இடம் பிடித்து அதற்கான பரிசினை பெற்றுள்ளது.

சென்னை தீவுதிடலில் நடைபெற்ற நிறைவு விழாவில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அரங்கு 3-வது இடம் பிடித்தமைக்காக அதற்கான பரிசினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன இயக்குநர் (நிதி) டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யாவுக்கு வழங்கினார்கள். அப்போது அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் பி.சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் உடனிருந்தனர்.

பரிசினை பெற்றுக்கொண்ட சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி) மேலும் தெரிவித்துள்ளதாவது:-

அடுத்த ஆண்டு நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முதல் இடத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒட்டுமொத்த வகையில் சிறந்த அரங்கிற்கான பரிசை பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்த அரங்கை வார நாட்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 பார்வையாளர்களும், வார இறுதி நாட்களில் சராசரியாக 1200 பார்வையாளர்களும் என இந்த அரங்கை 54 ஆயிரத்து 900 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளார்கள். இந்த அரங்கில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அங்கு வைக்கப்பட்டிருந்த QR குறியீடு மூலமாகவும், பதிவேடு மூலமாகவும் தெரிவித்துள்ளார்கள்.

பொதுமக்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அரங்கில் பயண அட்டை விற்பனையும் நடைபெற்றது. இந்த அரங்கில் இதுவரை 893 பயண அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பெருமக்கள் மூன்றாம் பரிசினை இந்த அரங்கிற்கு வழங்கியதில் பெரும் மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது.

அரசு சார்ந்த நிறுவனங்களில் சென்னை மெட்ரோ நிறுவனத்தை மூன்றாம் இடதிற்கு தேர்வு செய்தமைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News