தமிழகத்தில் நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் எத்தனை தெரியுமா? நீதிமன்றம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..
தமிழகத்தில் எத்தனை ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற விவரத்தை சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது.
உலக அளவில் இந்தியாவில் அதிகளவு ஊழல் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதேபோல, தமிழகத்திலும் தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் எத்தனை ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற விவரத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஆனால், ஓய்வுக்குப் பிறகு இதுவரை தனக்கு வழங்க வேண்டிய ஓய்வு பலன்கள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அண்ணாதுரை தனக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை நீதிபதி சுப்பிரமணியம் விசாரித்தார்.
அப்போது, தமிழகம் முழுவதும் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பல்வேறு நீதிமன்றங்களில் 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
மேலும், அந்த அறிக்கையை மேற்கோள்காட்டி, ஊழல் வழக்குகள் நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடுவர் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற செயலர் ஊழல் தடுப்பு சட்டத்தின் நோக்கத்தையே வீழ்த்திவிடும் என தெரிவித்த நீதிபதி சுப்பிரமணியம், தேவையில்லாமல் ஊழல் வழக்குகளை தள்ளி வைக்காமல் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அண்ணாதுரை தொடர்ந்த பொறுத்தவரை, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர், ஓய்வுகால பலன்களை பெற்று விட்டதால், மனுதாரருக்கும் சில பலன்களை வழங்கி விட்டு, குற்ற வழக்கு முடிவுக்கு வந்த பின் மீதி பலன்களை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பல்வேறு நீதிமன்றங்களில் 1635 ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையே அறிக்கை தாக்கல் செய்துள்ளதால், ஊழல் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.