மத்திய அரசு ஊழியர்கள் நலனை மேம்படுத்த குறை தீர்ப்பு முகாம்
ஓய்வூதியதாரர்கள், பயனாளிகள், சுகாதார அமைப்புகள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்கு இந்த குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவன் சிஜிஎச்எஸ் அலுவலகத்தில், நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிஜிஎச்எஸ் குறை தீர்ப்பு முகாமை நடத்தியது.
ஓய்வூதியதாரர்கள், பயனாளிகள், சுகாதார அமைப்புகள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்கு வெளிப்படையான தளத்தை அமைத்துத் தர முதன் முறையாக இத்தகைய முகாமை நடத்தியுள்ளது. மத்திய அரசின் சுகாதார திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளை புரிந்து கொள்ளும் வகையில் இத்தகைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இனிமேல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ச்சியாக இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. இந்த முகாமில் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 150-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பு, நேர்முக வரிகள் மற்றும் சுங்கவாரியம் ஆகியவற்றின் ஊழியர்களும் சிஜிஎச்எஸ் நல மையங்களின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர்.
சிஜிஎச்எஸ்-ன் கூடுதல் செயலாளர் மற்றும் தலைமை இயக்குனர் அலோக் சக்சேனா, இயக்குனர் டாக்டர் நிக்லேஷ் சந்திரா, சென்னையில் உள்ள சிஜிஎச்எஸ்-ன் கூடுதல் இயக்குனர் டாக்டர் சண்முகநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.