சென்னை கடற்கரை ரயில் நிலைய விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம்
விபத்து குறித்து சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் நடைமேடை க்கு கொண்டு வரப்பட்ட மின்சார ரயில் நேற்று மாலை தடம்புரண்டது. இதில் பயணிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
விடுமுறை தினம் என்பதால் நடைமேடையில் பொதுமக்கள் கூட்டம் எதுவும் இல்லாமல் இருந்தது. முதலில் விபத்திற்கான காரணம் பிரேக் பிடிக்காதது என்று சொல்லப்பட்டது. ஆனால் ரயில் விபத்துக்கு ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சென்னை மின்சார ரயில் விபத்து குறித்து சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டப் பிரிவு 279 மற்றும் 151, 154 ஆகிய பிரிவுகளின் கீழ் ஓட்டுநர் பவித்ரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.