எம் எல் ஏக்களுக்கு கார் வேண்டும்- அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் அப்பாவு
எம் எல் ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என பாஜக எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் முதல்வரிடம் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்;

ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு வாகனம் வழங்குவதாக முதல்வர் அறிவித்த நிலையில், தேவைப்படும் எம் எல் ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என பாஜக எம் எல் ஏ நயினார் நாகேந்திரன் முதல்வரிடம் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு கார் இல்லையென்றும், எனவே தொகுதி பிரச்சனைகளை விரைந்து சரிசெய்ய ஏதுவாக கார் வழங்க வேண்டும் என பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதில் வருகிற 24 ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்காக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் அமர்வுப் படித்தொகை 10 மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப் படித்தொகை 5 மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என கூறினார். இதே போல கடந்த திமுக ஆட்சியில் 385 ஊராட்சி தலைவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 13 வருடங்களாக புதிய வாகனங்கள் வழங்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டப் பணிகளை கண்காணித்திட ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து பல்வேறு சட்டமன்ற கட்சி தலைவர்களும் முதலமைச்சரின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
அப்போது பேசிய பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், அதே நேரத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு கார் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பல பேர் கார் கூட இல்லாத நிலையில் இருப்பதாகவும் அதனால் அவர்களுக்கு கார் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் எனக்கு தேவையில்லை எனவும் தன்னிடம் கார் இருப்பதாகவும் கூறினார்.
இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குறுக்கிட்டு பேசிய சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தமிழகத்தில் நிதிநிலைமை குறைவாக இருப்பதாக தெரிவித்தார். எனவே மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு தரவேண்டிய பணத்தை பெற்றுத் தருமாறு நகைச்சுவையாக தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.