பாதிக்கப்பட்ட பறவைகளை மீட்கும் பணி மேலும் ஒரு வாரம் நீடிக்கும்
கொசஸ்தலை ஆற்று பகுதியில் மேலும் ஒரு வாரத்திற்கு கண்காணிப்பு மற்றும் பறவைகள் மீட்பு பணிகள் நடைபெறும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையின் போது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது மணலியில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய்கழிவு பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து முகத்துவாரத்தில் கடலில் பரவியது. மேலும் வெள்ளத்தின் போது வீடுகளிலும் படிந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த எண்ணெய்கழிவால் கொசஸ்தலை ஆறு மற்றும் அடையாத்தி காடுகளில் உள்ள ஏராளமான பறவைகளும் பாதிக்கப்பட்டன. அதன் இறக்கைகளில் எண்ணெய் படர்ந்து பறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
அதனை வனத்துறையினர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். பறவைகளின் இறக்கைகளில் இருந்த எண்ணெய்கள் 'பிரஷ்' மூலம் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டன.
இதற்கிடையில் எண்ணெய் கழிவால் உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட 6 கூழைக் கடா பறவைகள் மீட்கப்பட்டு கிண்டி பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுவதும் நல்ல நிலையில் உள்ள அந்த பறவைகள் காட்டு பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளது.
எண்ணூர் கடல் பகுதி மற்றும் முகத்துவார பகுதிகளில் எண்ணெய்கழிவின் பாதிப்பு தற்போது குறைந்து இருந்தாலும் மேலும் பல பறவைகள் பாதிக்கப்பட்டு காட்டுப்பகுதி மற்றும் நீர்நிலையில் இருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து கொசஸ்தலை ஆற்று பகுதியில் மேலும் ஒரு வாரத்திற்கு கண்காணிப்பு மற்றும் பறவைகள் மீட்பு பணிகள் நடைபெறும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் கூறும்போது, சுமார் 20-க்கும் மேற்பட்ட கூழைக்கடா பறவைகள் எண்ணெய்கழிவில் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவை மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளன. கடந்த வாரத்தில் எங்கள் குழுவினர் பாதிக்கப்பட்ட 11 பறவைகளை நேப்பியர் பாலம் மற்றும் அடையாறு ஆற்று ஓரத்தில் கண்டனர்.
இதன் பின்னர் பாதிக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. எனினும் பறவைகள் கண்காணிப்பு மேலும் ஒரு வாரத்திற்கு இருக்கும் என்றார்.