நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பாஜக அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.;

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவை அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்துப் பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் செயலாளராக இருந்தவர் அழகுமுத்துப் பாண்டியன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவின் மூத்த மகளின் கணவர் ஆவார். தூத்துக்குடி மாவட்டத்தில் இடதுசாரி இயக்கத்தின் சார்பில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தார்.
உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அழகுமுத்துப் பாண்டியன் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நல்லகண்ணுவிடம் துக்கம் விசாரிக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னையில் உள்ள நல்லகண்ணுவின் இல்லத்திற்கே நேற்று நேரில் சென்றார்.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தன் முகநூல் பதிவில், "கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏழைகளின் பங்காளன் நல்லகண்ணு அய்யாவை பாஜக தலைவர்களுடன் சென்று சந்தித்தேன். ஐயாவின் மருமகன் சமீபத்திலே இறைவனடி சேர்ந்தார். அதற்காக எங்களுடைய வருத்தங்களைத் தெரிவித்து, அய்யாவின் உடல்நலத்தையும் விசாரித்துவிட்டு வந்தோம்!'' என பதிவிட்டுள்ளார்.