சென்னையில் தீப்பற்றி எரிந்த இருசக்கர மின்சார வாகனம் -தொடர் சம்பவத்தால் மக்கள் அச்சம்..!
சென்னை அம்பத்தூரில் இருசக்கர மின்சார வாகனம் இன்று தீப்பற்றி எரிந்தது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் அதே பகுதியில் உள்ள தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் கணேஷ் திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
வழக்கம் போல் பணி முடிந்து இன்று மாலை தந்தையின் வாகனத்தில் கணேஷ் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். திருவொற்றியூர் - மணலி மாதவரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய மின்சார வாகனத்தில் இருந்து வழக்கத்துக்கு மாறான சத்தம் வருவதை கேட்டு சாலையோரம் வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது வாகனம் புகைந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. பாலமுருகன் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவரது கண்ணெதிரில் வாகனம் முழுவதும் தீயில் கருகியது. அந்த சமயம் தமிழக குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான தண்ணீர் லாரி அந்த வழியாக வந்தது, அதன் உதவியால் வாகனத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் மின்சார வாகனம் தீ பற்றி எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் சார்ஜ் போடப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் வெடித்ததில் தந்தையும்,13 வயதான அவரது மகளும் உயிரிழந்த சம்பவம் இன்னும் நம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. இந்நிலையில் திருவள்ளூர், திருச்சி, சென்னை என தொடர்ச்சியாக மின்சார வாகனங்கள் தீப்பற்றி எரியும் சம்பவம் பொதுமக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.