சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதல் பார்க்கிங் வசதி
சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக வாகனம் நிறுத்துமிடம் திறக்கப்பட்டுள்ளது.;
சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக வாகனம் நிறுத்துமிடம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் தற்போது வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் விரிவு படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகனங்கள் நிறுத்த கூடிய இடத்திற்கு அருகாமையில் கூடுதலாக வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் 4656 சதுர மீட்டர் பரப்பளவில் இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு வாகன நிறுத்தும் இடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகன நிறுத்தும் வசதி நாளை (19.03.2023) முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த விரிவுபடுத்தப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தில் 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். மெட்ரோ இரயில் பயணிகள் இந்த வாகன நிறுத்தும் இடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி புதுப்பிக்கும் பணிக்களுக்காக மார்ச் 24, 2023 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது. இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும், நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் விரிவாக்கப்பட்ட வாகன வாகன நிறுத்துமிடத்திலும் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் விரிவாக்கப்பட்ட வாகனம் நிறுத்தும் இடத்தை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) நேற்று (18.03.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.