அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் புதிய வசதிகளுடன் கூடுதல் கட்டிடங்கள்

ரூ.8.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய கட்டடங்கள் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-04-04 08:15 GMT

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ.8.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய கட்டடங்கள் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.4.2022) சென்னை , அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில், 8 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆறு குளிர் சாதன் வசதியுடன் கூடிய மிடுக்கு வகுப்பறைகள் மற்றும் 15 குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகள் அடங்கிய இரண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.


தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம், 1975ன் கீழ் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி 1981-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பயிற்சிக்கான முக்கிய மையமாக விளங்கும் இந்நிறுவனம் அமைச்சுப்பணி முதல் அகில இந்தியப் பணி அலுவலர்கள் வரை அனைத்துத் தரப்பு அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி தரும் முதன்மை நிறுவனமாக விளங்குவதால், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையாலும், தமிழ்நாடு அரசாலும் மாநில நிர்வாகப் பயிற்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய சட்டங்கள், அறிவிக்கைகள், புதுமையான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகளில் அரசு ஊழியர்களின் பணித் திறனை மேம்படுத்தும் வகையில், புத்தாக்கப் பயிற்சி அளிப்பதற்கான முதன்மை நிறுவனமாகும். பயிற்சியாளர்களின் திறமையை மேம்படுத்திக் கொள்ளவும் நிர்வாக வளர்ச்சியில் செம்மையாகப் பணியாற்றவும் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களைக் கையாளவும் இந்நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது. இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும் அவ்வப்போது பல்வேறு பயிற்சிகளுக்காக இந்திய அரசு இங்கு அனுப்பி வருகிறது.

கடந்த ஆண்டுகளில் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்களுக்கு சென்னையில் 13,500 பயிற்சியாளர்களுக்கும் மண்டல பயிற்சி மையத்தின் சார்பில் 12,500 பயிற்சியாளர்களுக்கும் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் தற்போது குளிர் சாதன வசதியுடன் கூடிய 10 வகுப்பறைகளும் 48 விடுதி அறைகளும் உள்ளன.

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ஆறு மிடுக்கு வகுப்பறைகளும், பதினைந்து 15 புதிய விடுதி அறைகளும் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பயிற்சியாளர்களின் வசதிக்காக தற்போதுள்ள முதன்மைக் கட்டடத்தை ஒட்டி ஆறு குளிர் சாதன வசதியுடன் கூடிய மிடுக்கு வகுப்பறைகளும், குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகளும் அடங்கிய இரண்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை முதலமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.


இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் / அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் மைதிலி, க. இராஜேந்திரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News