சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள்

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-17 06:59 GMT

பைல் படம்.

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,45,000 பயணிகள் பயணம் செய்கின்றனர். அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகள் கூடுதலாக நிறுவப்பட உள்ளதாகவும், அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளதாவது:

தற்போது 41 மெட்ரோ இரயில் நிலையங்களில் சில நிலையங்களில் ஏறுவதற்கும் சில நிலையங்களில் இறங்குவதற்கு மட்டுமே நகரும் படிக்கட்டுகள் இருக்கும் நிலையில் சில நிலையங்களின் நுழைவு வாயிலில் கூடுதலாக நகரும் படிக்கட்டுகள் தேவைப்படுகிறது. மெட்ரோ பயணிகளின் நலன் கருதியும், அவர்களுது கோரிக்கைகளை ஏற்றும் தற்போது 41 மெட்ரோ நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது.

அதன்படி சின்னமலை, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், உயர்நீதி மன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, நேரு பூங்கா, அண்ணாநகர் கிழக்கு, பரங்கி மலை ஆகிய மெட்ரோ இரயில் நிலையங்களில் தலா ஒரு நகரும் படிக்கட்டுகள் வீதம் 11 நகரும் படிக்கட்டுகளும், நங்கநல்லூர்ச் சாலை, கிண்டி, நந்தனம், ஏ.ஜி-டி.எம்.எஸ். தியாகராயா கல்லூரி, எழும்பூர், ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய மெட்ரோ இரயில் நிலையங்களில் தலா 2 வீதம் 14 நகரும் படிக்கட்டுகளும், அண்ணா நகர் கோபுரம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 3 நகரும் படிக்கட்டுகளும், வடபழனி மற்றும் மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் தலா 4 வீதம் 8 நகரும் படிக்கட்டுகளும், திருமங்கலத்தில் 5 நகரும் படிக்கட்டுகளும் ஆக மொத்தம் 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது சராசரியாக ஒவ்வொரு மெட்ரோ இரயில் நிலையங்களிலும் 5 நகரும் படிகட்டுகள் உள்ளது. கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைத்த பின் சராசரியாக ஒவ்வொரு மெட்ரோ இரயில் நிலையங்களிலும் 6 நகரும் படிகட்டுகள் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News