நடிகையின் பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் அடைப்பு
நடிகை சாந்தினி அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர் செய்து. சிறையில் அடைத்தனர்.
மலேசிய நாட்டின் குடியுரிமையைப் பெற்றவர் நடிகை சாந்தினி, இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக நடித்து வருகிறார்.
நாடோடிகள் படத்தில் இவர் நடித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். அவரும், நானும் கடந்த 5 வருடங்களாக கணவன், மனைவிப் போல ஒன்றாக வாழ்த்து வந்தோம்.
அவரின் மூலம் 3 முறை கருவுற்றேன். திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் 3 முறையும் கருவை கலைத்தேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தினேன். அப்போது அவர் திருமணம் செய்ய மறுத்ததோடு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறார். இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
நடிகை சாந்தினி அளித்த புகாரில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சரின் மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து பெங்களூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
பின்னர் அவரை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம் 2 மணி நேரம் விசாணை நடைபெற்றது.
விசாரணைக்கு பின் சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ம் தேதி வரை நீதி மன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.