கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியத்திற்கு புதிய தளபதியாக ஏ.பி.படோலா நியமனம்

இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய புதிய தளபதியாக ஆனந்த் பிரகாஷ் படோலா வெள்ளிக்கிழமை சென்னையில் பொறுப்பேற்றார்.

Update: 2021-06-11 14:51 GMT

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்திய டி.ஐ.ஜி. சசிகுமாரிடமிருந்து( தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட புதிய தளபதி ஆனந்த் பிரகாஷ் படோலா (வலதுபுறம்).

இந்திய கடலோரக் காவல் படை ஐந்து பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு பிராந்தியத்தின் தலைமையகம் சென்னையில் உள்ளது. தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே விசாகபட்டனம் வரையிலான வங்கக் கடல் பகுதியில் கண்காணிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பணிகளை சென்னை பிராந்திய தலைமையகம் மேற்கொண்டு வருகிறது. இதன் பிரிவு அலுவலகங்கள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

கடலோரக் காவல் படையில் கிழக்கு பிராந்திய தளபதியாக எஸ்.பரமேஷ் இருந்து வந்தார். இவர் மேற்கு பிராந்திய தளபதியாக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து இப்பொறுப்பில் டி.ஐ.ஜி. டி.சசிகுமார் இருந்து வந்தார். இந்நிலையில் கிழக்கு பிராந்தியத்தின் புதிய தளபதியாக ஆனந்த் பிரகாஷ் படோலா நியமிக்கப்படார். இதனையடுத்து சென்னை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் டி,ஐ.ஜி. சசிகுமாரிடமிருந்து படோலோ தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

1990-ம் ஆண்டு கடலோரக் காவல் படையில் தன்னை இணைத்துக் கொண்ட படோலா கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியுள்ளார். மேற்கு பிராந்திய தளபதியாக பணியாற்றி வந்த படோலா தற்போது கிழக்கு பிராந்தியத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பிராந்திய தளபதியாகப் பொறுப்பேற்ற படோலாவிற்கு கடலோரக் காவல் படை உயர் அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இவரது சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் விருது படோலாவிற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News