9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.;

Update: 2021-10-06 02:50 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்க நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 27,003 பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை துவங்கியது.

இத்தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 பேர் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 79,433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு: 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும், 755 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கும், 1,577 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், 12,252 கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான பதவிக்கும் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது..

வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் வாக்களிக்கும் வகையில் கடைசி ஒரு மணி நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7,921 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில், 41 ஆயிரத்து 500 வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது..

171 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 3,777 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 17,130 போலீஸார், 3,405 ஊர்க் காவல் படையினர் என மொத்தம் 20 ஆயிரத்து 535 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நுண்பார்வையாளர்களை நியமித்து தேர்தல் நடத்தை விதிமீறல்களை விடியோ பதிவு செய்வதுடன், அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் பணிகளை இணையதளம் வழியே நேரடியாக கண்காணிக்கிறத மாநிலத் தேர்தல் ஆணையம்

வாக்குச் சாவடி சீட்டு இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சல் கணக்குப் புத்தகம், தொழிலாளர் நல அமைச்சகத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை(பான் கார்டு), தேசிய மக்கள் பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அடையாள அட்டை, மத்திய, மாநில மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

உடல் வெப்பநிலையைக் கண்டறியும் கருவி, கைகளைச் சுத்தப்படுத்த கிருமிநாசினி, முகக்கவசம், முகத்தை முழுமையாக மறைக்கும் முகக்கவசங்கள், தேர்தல் பணியாளர்களுக்கான கையுறைகள், முழு உடல் பாதுகாப்பு கவசம், மருத்துவ உபகரணங்கள் வைக்கும் பைகள், வாக்காளர்களுக்கான நெகிழி கையுறைகள், பஞ்சு, உபயோகப்படுத்தப்பட்ட கையுறைகளைப் போடுவதற்கான குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட 13 வகையான பொருள்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் னைவக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடிகளில் சாய்வு தளம், சக்கர நாற்காலி, உதவியாளர்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 4 வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு மஞ்சள் நிறத்திலும், ஒன்றியக் குழு உறுப்பினருக்கு பச்சை நிறத்திலும், ஊராட்சிமன்றத் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் உள்ளது. ஒரு வாக்காளர் 4 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

இன்று காலை 7 மணி முதல் அதிக ஆர்வத்துடன் பொதுமக்கள் நீண்ட விரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Tags:    

Similar News