சென்னையில் 80 சதவீதம் மாநகரப் பேருந்துகள் இயக்கம்

சென்னையில் புதன்கிழமை காலை முதல் 80 சதவீத மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.;

Update: 2023-12-06 06:13 GMT

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்தே தொடா்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் பெரும்பாலான இடங்களில் மழைநீா் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மாநகரப் பேருந்து ஓட்டுநா்கள் தங்கள் பணிகளுக்கும், பணி முடித்தவா்கள் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மிக்ஜம் புயல் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை விடப்பட்டிருந்ததாலும், பலத்த மழை தொடா்ந்து பெய்ததாலும், பேருந்துகளில் பயணிப்பவா்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் குறைவான பேருந்து சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டன. குறிப்பாக முக்கிய சாலைகளில் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

இந்த சேவையும் பிற்பகலுக்குப் பிறகு படிப்படியாக குறைக்கப்பட்டு, மாலையில் 90 சதவீதம் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மழை தொடா்ந்து பெய்து வருவதால் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்குமாறு ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது

இதைத்தொடா்ந்து மழை பாதிப்புகள் சரி செய்யப்பட்ட பின்னா், செவ்வாய்க்கிழமை காலை முதல் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் 80 சதவீத மாநகரப் பேருந்துகள் புதன்கிழமை காலை முதல் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்காக பேருந்துகள் அனுப்பப்பட்டு வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News