சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
சென்னையில் நாளை 1600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.;
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் தற்போது வரை நடைபெற்ற 5 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம், 200 வார்டுகளிலும் தடுப்பூசி மையங்களின் வாயிலாக 36 லட்சத்து 14 ஆயிரத்து 747 முதல் தவணை தடுப்பூசிகள், 20 லட்சத்து 71 ஆயிரத்து 455, 2-வது தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 56 லட்சத்து 86 ஆயிரத்து 202 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனியார் ஆஸ்பத்திரிகளின் மூலமாக மொத்தம் 71 லட்சத்து 19 ஆயிரத்து 870 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் நாளை 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 6-வது தீவிர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களின் மூலம் சுமார் 2.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 600 டாக்டர்கள், 600 நர்சுகள் உட்பட மொத்தம் 16 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது 3 லட்சத்து 24 ஆயிரத்து 760 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1 லட்சத்து 36 ஆயிரத்து 640 கோவேக்சின் தடுப்பூசிகளும் என மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 400 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களும், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களும் மாநகராட்சியின் சிறப்பு முகாம்களில் பங்குபெற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.