675 கிராம் தங்க கட்டி, 10,100 போதை மாத்திரைகள் பறிமுதல்: சுங்கத்துறை அதிரடி
சென்னையில் 675 கிராம் தங்க கட்டி,10,100 போதை மாத்திரைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்த சக்திகுமார் கிருஷ்ணசாமி(29) என்ற பயணியிடம், சுங்கத்துறையின் புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அவர் தனது உடலில் 675 கிராம் தங்க கட்டி பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவவலகத்தில், தில்லியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு 7 பார்சல்களை முன்பதிவு செய்திருந்தார். சந்தேகத்தின் பேரில் அவற்றை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவற்றில் 2 பார்சல்களில், ஓனாபில் -2 குளோனாசெபம் என்ற போதை மாத்திரைகள் 2,800 இருந்தன. மற்ற 3 பார்சல்களில் டயஸெபம் என்ற 4500 போதை மாத்திரைகளும், மீதமுள்ள 2 பார்சல்களில் டிரமடால் என்ற போதை மாத்திரைகள் 2,800ம் இருந்தன. இவை அனைத்தும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களாகும்.
மொத்தம் 7 பார்சல்களில் இருந்து, 10,100 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.