மன அழுத்தத்தைக் குறைத்து, புத்துணர்ச்சியோடு பணி செய்ய 5 நிமிட யோகா
சென்னை சாஸ்திரி பவனில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் 21 நாள் இலவச யோகா பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.
சென்னை சாஸ்திரி பவனில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் 21 நாள் இலவச யோகா பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் இணைந்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் துறைகள், இந்தப் பயிலரங்கை நடத்துகின்றன. மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இதில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர். ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ள ஒய்-பிரேக் அமர்வுகளின் போது சக ஊழியர்களிடையே யோகா பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பங்கேற்பாளர்களுக்கு யோகாவின் பல்வேறு அம்சங்களை பயிற்றுவிப்பதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும். தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மருத்துவர்கள் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
சென்னை தாம்பரத்தில் இயங்கும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், பொது மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, முதுகலை பட்டதாரிகளுக்கு மருத்துவப் பயிற்சியையும் அளிக்கிறது. இந்த மருத்துவ நிறுவனத்தில் தரமான சேவைகள் வழங்கவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், யு.எஸ்.ஜி, பி.எஃப்.டி, ஈ.சி.ஜி, ஊடுகதிர், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், நோயியல் ஆய்வகங்கள், சித்த மருந்தியல் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, புத்துணர்ச்சியோடு மீண்டும் பணியில் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஆயுஷ் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து நிமிட யோகா நெறிமுறையான 'ஒய்-பிரேக்' என்ற யோகா நெறிமுறை செயலியில் ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் முதலியவை இடம்பெற்றுள்ளன.