சென்னை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்கள்

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 19.022022 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.;

Update: 2022-02-16 11:40 GMT

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி 

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் -2022 யை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகரட்சிக்கு உட்டபட்ட 15 மண்டலங்களில் கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட உள்ளன, என மாவட்ட தேர்தல் அலுவலர் அரசு முதன்மைச் செயலாளர் ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் - 2022யை முன்னிட்டு, கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பறக்கும் படைக் குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அரசு முதன்மைச் செயலாளர் ஆணையாளர் கன்தீப்சிங் பேடி, மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், ஆகியோர் தலைமையில் நேற்று (15.022022) ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பறக்கும் படை குழுவினர் தங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், வார்டுகளுக்கு உட்பட்ட தெருக்களின் உட்பகுதிக்கு அடிக்கடி சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றனவா என்பதனை கண்காணித்து எவ்வித பாகுபாடுமின்றி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

பெருநகர சென்னை மாநகராட்சி, 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு மண்டலத்திற்கு மூன்று குழுக்கள் வீதம் 45 பறக்கும் படை குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. ஆவணங்களின்றி தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.50,000/-க்கு மேல் அல்லது ரூ.10,000/க்கு மேற்பட்ட மதிப்புள்ள பரிசு பொருட்களை கொண்டு சென்றால் பறக்கும் படைக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இது வரை தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ 18,13,598 ரொக்கமாகவும், ரூ 1,27,62500 மதிப்புள்ள பொருட்களும் பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில் கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஒரு மண்டலத்திற்கு மூன்று குழுக்கள் வீதம் 15 மண்டலங்களுக்கு மேலும் 45 பறக்கும் படை குழுக்கள் கூடுதலாக 17.022022 அன்று முதல் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் துணை வாக்காளர் பட்டியலுடன் சேர்த்து மொத்தம் 6173,12 வாக்காளர்கள் உள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் மற்றும் பணம், பரிசு பொருட்கள் குறித்த தகவல்களை மாநகராட்சி தலைமையிடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1800 425 7012 ல் தெரிவித்தால் உடனடியாக பறக்கும்படை குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் அரசு முதன்மைச் செயலாளர் ஆணையாளர் கன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் டாக்டர் என். கண்ணன் , செந்தில் குமார், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் துணை ஆணையாளர்கள் விஷ மஹாஜன் டாக்டர் எஸ் மணிஷ், சிமரன்ஜீத் சிங் காஹ்லோன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News