ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை :ரயில்வே போலீசார் எச்சரிக்கை
ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை என்று ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
தீபாவளி பண்டிகை நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், ரயில்களில் செல்லும் பயணிகள், பட்டாசுக்களை கொண்டு செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி எக்மோர் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான பாதுகாப்புப்படை போலீசார், விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
மேலும் தீபாவளி என்றால் கொண்டாட்டம், பட்டாசு எடுத்து சென்றால் திண்டாட்டம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பயணிகளிடம் வழங்கினர்.
பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். சோதனையின் போது, ஒலிபெருக்கியின் மூலம், பயணிகள் யாரும் ரயிலில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது. மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் எச்சரித்தனர்.
தீபாவளி பண்டிகை வருவதால், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் ரயிலில் எளிதில் வெடிக்கக்கூடிய பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. இதனை மீறுவோர் மீது ரெயில்வே சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபாவளி பண்டிகையையொட்டி 24 மணி நேரமும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடும் வகையில் கூடுதல் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மின்சார ரெயிலிலும் பட்டாசுகளை பயணிகள் கொண்டு செல்வதை கண்காணிப்பதற்கும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.